மகளிர் எழுதல் 1550. | ஐஉறும் சுடர் மேனியான் எழில் காண மூளும் அவாவினால், கொய்யுறும் குல மா மலர்க் குவைநின்று எழுந்தனர் - கூர்மை கூர் நெய் உறும்சுடர் வேல் நெடுங்கண் முகிழ்த்து, நெஞ்சில் நினைப்பொடும் பொய் உறங்கும் மடந்தைமார் - குழல் வண்டு பொம்மென விம்மவே. | கூர்மை கூர் - கூர்மை மிக்க; நெய்உறும் சுடர் வேல் - நெய் பூசப்பட்டஒளிபொருந்திய வேல் போன்ற; நெடுங் கண் முகிழ்ந்து - நீண்ட கண்களை மூடிக்கொண்டு; நெஞ்சில் நினைப்பொடும் - மனத்தில் இராமனைப் பற்றிய எண்ணத்தோடு; பொய்உறங்கும் மடந்தைமார் - கள்ளத்துயில் கொண்ட மகளிர்; ஐ உறும் சுடர் மேனியான் - வியப்பைத் தருகின்ற ஒளிவீசும் திருமேனியையுடைய இராமபிரானது; எழில் காண - முடிசூடியபுதிய அழகைக் காண்பதற்கு; மூளும் அவாவினால் - கிளர்ந்தெழுகின்ற ஆசையினால்; கொய் உறும் குல மா மலர்க் குவை நின்று - கொய்யப்பட்ட சிறந்த பெரிய மலர்த்தொகுதியினால்செய்யப்பட்ட படுக்கையிலிருந்து; குழல்வண்டு பொம்என விம்ம- இசைப்பாட்டையுடைய வண்டுகள் பொம்மென்று ஆளத்திவைக்க; எழுந்தனர்-. ‘நாம விற்கை’ (1545) என்று தொடங்கும் பாடல் தத்தம் கணவரோடு கூடியிருந்த பெண்கள்விழித்ததைத் தெரிவிப்பது; இப்பாடல் கன்னிப்பெண்கள் விழித்தெழுந்ததைக் கூறுவது. இராமனது முடிசூட்டு விழாவைக் காணும் ஆசை நெஞ்சில் மூண்டெழுவதால் உறக்கம் வராதிருக்கவும் கண்மூடிக் கிடந்தனர். ஆதலின் அது ‘பொய் உறக்கம்’ ஆயிற்று. எழில் - மேலும் மேலும் வளர்ந்து சிறக்கும் அழகு. குவை - ஆகுபெயராய் மலர்களால் ஆகிய படுக்கையை உணர்த்திற்று. குழல் வண்டு - குழல்போல இசைபாடும்வண்டு. “பொன் பால் பொருவும் விரை அல்லி புல்லிப் பொலிந்த பொலந்தாது, தன்பால் தழுவும்குழல்வண்டு, தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே” (3736) என்னும் இடத்தும் இப்பொருளில்வருதல் காணலாம். பொம்மென - ஒலிக்குறிப்பு. 60 |