விளக்குகள் ஒளி மழுங்குதல்  

1553.வையம் ஏழும் ஓர் ஏழும் ஆர் உயிரோடு
     கூட வழங்கும் அம்
மெய்யன், வீரருள்வீரன், மா மகன்மேல்
     விளைந்தது ஒர்காதலால்
நைய நைய, நல் ஐம்புலன்கள்
     அவிந்து அடங்கி நடுங்குவான்
தெய்வ மேனி படைத்த சேயொளி
     போல் மழுங்கின - தீபமே.

     வையம் ஏழும் ஓர் ஏழும் - பதினான்கு உலகங்களையும்;  ஆர்
உயிரோடு கூட வழங்கும்அம் மெய்யன் -
தன் அரிய உயிருடனே
சேர்த்துக் கொடுக்கின்ற அந்த மெய்ம்மையாளனும்; வீரருள் வீரன் -
வீரர்களுக்குள் வீரனாய் இருப்பவனுமாகிய தயரதன்;  மா மகன்மேல்
விளைந்தது ஓர் காதலாதல்-
தன் மூத்த பிள்ளையிடத்து எழுந்த ஒப்பற்ற
பாசத்தால்; நையநைய - மிகவும் வருந்த;  நல் ஐம்புலன்கள் அவிந்து
அடங்கி -
சிறந்த ஐந்து புலன்களும்கெட்டு அடங்கிப்போக; நடுங்குவான்
தெய்வமேனி படைத்த -
நடுங்குகி்ன்றவனாகிய தயரதனதுதெய்வத்தன்மை
பொருந்திய உடலில் இருந்த;  சேய் ஒளிபோல் - செவ்விய ஒளி மெல்ல
மெல்லமழுங்குவது போல; தீபம் மழுங்கின - விளக்குகள் (பொழுது
விடிவதால்) ஒளி குறைந்தன.

     தயரதன் மேனி ஒளியிழந்தது போலத் தீபங்களும் ஒளியிழந்தன.  மா
மகன் - மூத்த மகன்,ஈண்டுப் பிறப்பானும் சிறப்பானும் முதல்வனாகிய
இராமனைக் குறித்தது. திருவுடை மன்னன் திருமாலாகக்கொள்ளப்படுதலின்,
அவன் மேனி  ‘தெய்வமேனி’ எனச் சிறப்பிக்கப்பட்டது. உயிர்ப்பிரியும்
காலம் அடுத்தபோது,  புலன்கள் கலங்கி ஒடுங்குதலும்,  உடம்பின் ஒளி
குன்றுதலும் நிகழ்வனவாகும்.                                   63