பல்வகை இசையொலி 1554. | வங்கியல் பல தேன் விளம்பின.; வாணி முந்தின பாணியின் பங்கி அம்பரம் எங்கும் விம்மின; பம்பை பம்பின; பல் வகைப் பொங்கு இயம் பலவும் கறங்கின; நூபுரங்கள் புலம்ப, வெண் சங்கு இயம்பின; கொம்பு அலம்பின, சாம கீதம் நிரந்தவே. |
வங்கியம் பல - இசைக் குழல்கள் பலவும்; தேன் விளம்பின - தேன்போலும் இனிய இசையை ஒலித்தன; வாணி முந்தின பாணியின் பங்கி - சொற்கள் முற்பட்ட இசைப்பாட்டின் வகைகள்; அம்பரம் எங்கும் விம்மின - வானம் எங்கும் நிறைந்தன; பம்பை பம்பின - பம்பை என்னும் வாத்தியங்கள் பேரொலி செய்தன; பல்வகை -பலவகையான; பொங்கு இயல் பலவும் - மகளிரின் காற்சிலம்புகள் ஒலிக்க; வெண்சங்குஇயம்பின- வெள்ளிய வளையல்கள் அவற்றிற்கேற்ப ஒலித்தன; கொம்பு அலம்பின - ஊது கொம்புகள் ஒலித்தன; சாமகீதம் நிரந்த - சாமவேத இசை நிரம்பின. அயோத்தி நகரில் காலையில் எழுந்த பல்வேறு ஒலிகள் குறிக்கப்பட்டன. கொட்டுவன, தட்டுவன, ஊதுவன முதலிய வாத்தியங்கள் பலவகை. நூபுரங்கள் புலம்ப என்பதற்கு மகளிர் காற்சிலம்பு என்றுபொருள் கொண்டதற்கு ஏற்பச் ‘சங்கு இயம்பின’ என்பதற்கு வளையல்கள் ஒலித்தன என்றுபொருள்கொள்ளப்பட்டது. சங்கு - சங்கினால் ஆகிய வளையல். ஏ - ஈற்றசை. 64 |