தாமரைகள் மலர்தல்  

1556.மூவர் ஆய், முதல் ஆகி, மூலம்
     அது ஆகி, ஞாலமும் ஆகிய
தேவ தேவர் பிடித்த போர் வில்
     ஒடித்த சேவகன், சேண் நிலம்
காவல் மா மூடி சூடு பேர் எழில்
     காணலாம் எனும் ஆசை கூர்
பாவைமார் முகம் என்ன முன்னம்
     மலர்ந்த - பங்கய ராசியே.

     மூவர் ஆய் - அயன்,  அரி,  அரன் என்னும் மூன்று மூர்த்திகளாகி;
முதல் ஆகி- அம்மூவர்க்குள்ளும் திருமாலாகிய முதல்வனாகி;  மூலம்
அது ஆகி -
இவையெல்லாவற்றிற்கும்அடியாய் ஆகி;  ஞாலமும் ஆகி -
உலகத்துள்ள எல்லாப் பொருள்களும் தானே ஆகி;  அத்தேவதேவர்
பிடித்த போர் வில் -
அந்த மகாதேவராகிய சிவபெருமான் பிடித்த
போரிற்குரியவில்லை; ஒடித்த சேவகன் - (சீதையை மணத்தற்காக) ஒடித்த
வீரன் ஆகிய இராமபிரான்; சேண் நிலம் காவல் - பெரிய மண் முழுதும்
காத்தற்குரிய;  மாமுடிசூடுபேர் எழில் -சிறந்த மகுடத்தைச்
சூட்டிக்கொள்ளும் பேரழகை; காணலாம் எனும் ஆசை கூர்- பார்க்கலாம்
என்னும் ஆவல் மிகுந்த;  பாவைமார் முகம் என்ன -  பெண்களின்
முகங்கள்போல;  பங்கயராசி முன்னம் மலர்ந்த - தாமரைப் பூக்களின்
கூட்டம்  முந்தி மலர்ந்தன.

     தாமரைப் பெண்களின் முகத்திற்கு உவமையாகச் சொல்வதே வழக்கம்.
இங்குப் பெண்களின் முகம்போலத்தாமரை மலர்ந்தன என்றார். இது எதிர்
நிலை உவமை அணி.

    “முதலாவார் மூவரே;  அம்மூவர்  உள்ளும்
     முதலாவான் மூரிநீர் வண்ணன்”

என்பது பொய்கையாரின் முதல் திருவந்தாதி.                       66