குமரனின் மகிழ்ச்சி அறுசீர் ஆசிரிய விருத்தம் 1559. | பொங்கிய உவகை வெள்ளம் பொழிதர, கமலம் பூத்த சங்கை இல் முகத்தார், - நம்பி தம்பியர் அனையர் ஆனார் - செங் கயல் நறவம் மாந்திக் களிப்பன சிவனும் கண்ணார் குங்குமச் சுவடு நீங்காக் குவவுத் தோற் குமரர் எல்லாம். |
பொங்கிய உவகை வெள்ளம் பொழிதர - மேலெழுந்த மகிழ்ச்சியால் தோன்றியமகிழ்ச்சிப் பெருக்குப் பெருக; கமலம் பூத்த சங்கை இல் முகத்தார் - தாமரைபோல்மலர்ந்த களங்கமில்லாத முகத்தை உடையவராகிய; நறவம் மாந்தி - தேனையுண்டு; களிப்பன செங்கயல் சிவணும் கண்ணார் - களிப்பவையான செவ்விய கெண்டை மீன்களை ஒத்தகண்களையுடைய மகளிரது; குங்குமச் சுவடு நீங்கா - (மார்பில் அப்பிய) குங்குமக்குழம்பினது அடையாளம் நீங்காத; குவவுத் தோள் குமரர் எல்லாம் - திரண்ட புயங்களையுடையஆடவர் அனைவரும்; நம்பி தம்பியர் அனையர் ஆனார் - இராமபிரானுடைய தம்பிமாரை ஒத்தவராக ஆயினர். இராமபிரானைக் காட்டிலும் வயது குறைந்த இளைஞர்கள் தங்கள் தமையனுக்கு முடிசூட்டுவழாநடப்பதாக எண்ணி மகி்ழ்ந்தனர். மதுவைக் குடித்துக் களித்திருக்கும் செங்கயலைச் செவ்வரிபடர்ந்து களித்திருக்கும் மகளிர் கண்களுக்கு உவமை கூறினார். சோக வெள்ளத்தை நீக்குவதற்கு உவகை வெள்ளம் என்றார். சங்கை - குற்றம், களங்கம், சிவணல் - நிகர்த்தல். 69 |