பெரும்பாலோர் மனநிலை 1560. | மாதர்கள், கற்பின் மிக்கார், கோசலை மனத்தை ஒத்தார்; வேதியர் வசிட்டன் ஒத்தார்; வேறு உள மகளிர் எல்லாம் சீதையை ஒத்தார்; அன்னாள் திருவினை ஒத்தாள்; அவ் ஊர்ச் சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார். |
அவ் ஊர் - அந்த அயோத்தி நகரத்தில் வாழும்; கற்பின் மிக்கார் மாதர்கள் - கற்பிற் சிறந்த முதிய மகளிர்கள்; கோசலை மனத்தை ஒத்தார் -இராமனுடையதாய் கோசலையின் மனம் போன்ற மனம் உடையவர் ஆயினர்; வேறு உள மகளிர்எல்லாம் - மற்ற இளம் பெண்கள் எல்லாம்; சீதையை ஒத்தார் - மகிழ்ச்சியில்சீதையைப் போன்றவர் ஆயினர்; அன்னாள் திருவினை ஒத்தாள் - அந்தச் சீதை இலக்குமியை ஒத்தவள்ஆயினாள்; வேதியர் வசிட்டன் ஒத்தார் - மறையவர்கள் வசிட்டமுனிவரைப் போன்றவர் ஆயினர்; சாதுகை மாந்தர் எல்லாம் - சாதுக்களான முதிய ஆடவர்எல்லாரும்; தயரதன் தன்னை ஒத்தார் - தயரத மன்னனைப் போன்றவர் ஆயினர். நகர மக்கள் அவரவர் தகுதிக்கேற்ப அடைந்த மகிழ்ச்சிபொருந்திய மனநிலை அழகுற எடுத்துக் காட்டப்படுகிறது. இராமன் முடுசூடுவது அரசத் திருவைமனத்தலாதலால் அத்திருமகள் மகிழ்வதுபோலச் சீதை மகிழ்ந்தாள் என்றார். 70 |