தெருக்களில் மக்கள் நெருக்கம்  

1562.பாகு இயல் பவளச் செவ்வாய்,
     பணை முலை, பரவை அல்குல்,
தோகையர் குழாமும், மைந்தர் சும்மையும்
     துவன்றி, எங்கும்,
‘ஏகுமின், ஏகும்’ என்று என்று,
     இடை இடை நிற்றல் அல்லால்,
போகில; மீளகில்லா -
     பொன் நகர் வீதி எல்லாம்.

     பொன் நகர் வீதி எல்லாம் - அந்த அழகிய நகரத்தின் தெருக்களில்
எல்லாம்; பாக இயல் பவளச் செவ்வாய் - தேன்பாகு போன்ற
இனிமையையும்  பவளம் போன்றசெய்மையையும் உடைய உதடுகளையும்; 
பணை முலை - பருத்த தனங்களையும்;  பரவை அல்குல்- பரந்த
அரைப் பகுதியினையும் உடைய;  தோகையர் குழாமும் - மகளிரது
கூட்டமும்; மைந்தர் சும்மையும் - ஆடவர்  கூட்டமும்;  எங்கும்
துவன்றி -
எல்லாஇடங்களிலும்  நெருங்கி;  ஏகுமின் ஏகும் என்று
என்று -
செல்லுங்கள் செல்லுங்கள் என்றுபலமுறை சொல்லிக்கொண்டு;
இடை இடை நிற்றல் அல்லால் - தாம் தாம் நின்றஇடங்களிலேயே
நிற்பதை அன்றி; போகில - முன்னேறிச் செல்லவுமில்லை;  மீளகில்லா-
திரும்பிச்  செல்ல ஆற்றலற்றனவும் ஆயின.

     இது நகரத்தில் உண்டான போக்குவரத்து நெருக்கடியைக்
கூறுமுகமாகக் கூட்டத்தின் மிகுதியைப்புலப்படுத்தியது. தோகையர் -
மயில்போலும் சாயலுடையவர்.  சும்மை - கூட்டம்.                   72