கூட்டத்தின் பெருக்கம் பற்றிய பேச்சு  

1563.‘வேந்தரே பெரிது’ என்பாரும்,
     ‘வேதியர் பெரிது’ என்பாரும்,
‘மாந்தரே பெரிது’ என்பாரும்,
     ‘மகளிரே பெரிது’ என்பாரும்,
போந்ததே பெரிது’ என்பாரும்,
     ‘புகுவதே பெரிது’ என்பாரும்,
தேர்ந்ததே தேரிந் அல்லால், யாவரே
     தெரியக் கண்டார்?

     வேந்தரேபெரிது என்பாரும் - (அந்தக் கூட்டத்தில்) அரசர்களின்
தொகுதியேமிகுதி என்பவரும்;  வேதியர்  பெரிது  என்பாரும்-
மறையவர் தொகுதியே  மிகுதிஎன்பவரும்; மாந்தரேபெரிது
என்பாரும்
-
ஆடவர் தொகுதியே மிகுதி என்பவரும்;  மகளிரேபெரிது
என்பாரும் -
பெண்டிர் தொகுதியேமிகுதி என்பவரும்;  போந்ததே
பெரிது  என்பாரும் -
வந்து  சேர்ந்தவர் கூட்டமே மிகுதிஎன்பவரும்;
புகுவதே பெரிது  என்பாரும் - வரப்போகும்கூட்டமே  மிகுதியாக
இருக்கும் என்பவரும் ஆக;  தேர்ந்ததே தேரின் அல்லால்- தாம்
அறிந்ததையே அறிந்ததன்றி; யாவரே தெரியக் கண்டார்- எவர்தாம்
முழுவதும் நன்றாய் அறிந்தவர்? (ஒருவருமில்லைஎன்றபடி).

     இதனால் ஒவ்வொரு குழுவும் அளவிட முடியாதவாறு மிகுதியாய்
இருந்தது  என்பது குறிக்கப்பட்டது. வேந்தர் முதலியவர் அவரவர்
தொகுதிக்கு ஆகிவந்தனர்;  ஆகுபெயர்.  பெரிது என்னும் ஒன்றன்பால்
வினைமுடிபுக்கு ஏற்ப அவ்வாறு கொள்ளல் வேண்டும். மகளிரைப் பின்னர்க்
குறித்தமையின்மாந்தர்  என்பது அவர்களை நீக்கி ஆடவரை மட்டும்
கூட்டியது.                                                    73