மகளிர் கூட்டத்தின் வருகை  

1564.குவளையின் எழிலும், வேலின்
     கொடுமையும், குழைத்துக் கூட்டி,
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த
     நஞ்சினைத் தெரியத் தீட்டி,
தவள ஒண் மதியுள் வைத்த
     தன்மை சால் தடங் கண் நல்லார்,
துவளும் நுண் இடையார், ஆடும்
     தோகை அம் குழாத்தின் தொக்கார்.

     குவளையின் எழிலும் - கருங்குவளை மலரின் அழகையும்; வேலின்
கொடுமையும் -
வேற்படையின் கொலைத் தன்மையையும்;  குழைத்துக்
கூட்டி -
ஒன்றாய்க் கலந்து சேர்த்து; திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த-
விளங்குகின்ற மை என்று பெயர்பொருந்திய;  நஞ்சினைத் தெரியத்
தீட்டி
- விடத்தை விளங்கப் பூசி ;  தவளஒன்மதியுள் வைத்த தன்மை
சால் -
வெள்ளிய ஒளிமிக்க சந்திரனிடத்தில் வைத்தாற்போன்றதன்மை
அமைந்த; தடங் கண் நல்லார் - பெரிய கண்களையுடைய அழகியவரும்;
துவளும் நுண் இடையார்-துவளுகின்ற மெல்லிய இடையினையுடையவரும்
ஆகிய மகளிர்; ஆடும் தோகைஅம் குழாத்தின் - நடனமாடும் ஆழகிய
மயிற்கூட்டம் போல;  தொக்கார் - வந்துகூடினர்.

     குவளையின் அழகையும் வேலின் கொடுமையையும் சேர்த்து,
மையாகிய நஞ்சினைப்பூசி, மதியுள்வைத்தன போலும் கண்கள் என்பது
இல்பொருள் உவமை. ‘அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சு’ என்பது உருவகம்.
தோகை - ஆகுபெயர்.                                         74