வேதம் வல்லார் வருகை 1567. | முன் பயந்து எடுத்த காதல் புதல்வனை முறையினோடும் இற் பயன் சிறப்பிப்பாரின். ஈண்டிய உவகை தூண்ட, அற்புதன் திருவைச் சேரும் அரு மணம் காணப் புக்கார் - நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறைக் கிழவர் எல்லாம். |
தவத்தின் நல் பயன் உய்க்கும் - தம் தவத்தின் ஆற்றலால் நல்ல பயன்களைத்தருகின்ற; நால் மறை கிழவர் எல்லாம் - நான்கு வேதங்களுக்கும் உரிய அந்தணர்எல்லோரும்; முன் பயந்து எடுத்த காதல் புதல்வனை - தாம் முற்படப் பெற்றெடுத்தஅன்புக்குரிய பிள்ளையை; முறையினோடும் - முறைமையுடன்; இல் பயன் சிறப்பிப்பாரின் - இல்வாழ்க்கைப் பயனில் மேம்பட மணஞ்செய்விப்பவர் போல; ஈண்டிய உவகைதூண்ட- மிக்க மகிழ்ச்சி செலுத்த; அற்புதன் திருவைச் சேரும்- இராமபிரான்அரசத் திருவைச் சேர்கின்ற; அருமணம் காணப் புக்கார் - அரிய திருமணத்தைக் காணமண்டபத்தினுள் புகுந்தனர். தம் மூத்த மகனுக்குத் திருமணம் செய்விக்கும்போது எவ்வளவு உவகை கொள்வாரோ அவ்வளவுஉவகையோடு அந்தணர்கள் இராமபிரான் முடிசூட்டுவிழாவைக் காண மண்டபத்தினுள் புகுந்தனர். அற்புதன் - மாய விளையாட்டுடையவன். 77 |