பலவகை நிகழ்ச்சிகள் | 1568. | விண்ணவர் விசும்பு தூர்த்தார்; விரிதிரை உடுத்த கோல மண்ணவர் திசைகள் தூர்த்தார்; மங்கலம் இசைக்கும் சங்கம், கண் அகல் முரசின், ஓதை கண்டவர் செவிகள் தூர்த்த; எண் அருங் கனக மாரி எழு திரைக் கடல்கள் தூர்த்த. |
விண்ணவர் விசும்பு தூர்த்தார் - (அவ் விழாவைக் காண வந்த) வானவர் ஆகாயத்தைநிரப்பினர்; விரிதிரை உடுத்த கோல மண்ணவர்- பரந்த கடலை ஆடையாக உடுத்த அழகியபூமியில் உறைவோர்; திசைகள் தூர்த்தார் - எட்டுத் திக்குகளையும் நிரப்பினர்; மங்கலம் இசைக்கும் சங்கம் ஓதை - மங்களகரமாக ஒலிக்கும் சங்குகளினடைய ஒலியும்; கண் அகல் முரசின் ஓதை- அகன்ற கண்ணையுடைய முரசவாத்தியங்களினுடைய ஒலியும்; கண்டவர் செவிகள் தூர்த்த - விழாக்காண வந்தவர் செவிகளை நிரப்பின; எண் அருங்கனக மாரி - தானமாகத் தரப்பட்ட அளவிடற்கு அரிய பொன்மழை; எழுதிரைக் கடலும்தூர்த்த - அலைகளையுடைய ஏழு கடல்களையும் நிரப்பின. மண்டபத்துள் சங்க நாதமும், முரசின் ஒலியும் செவிகளை நிறைக்க. பொன்மழைபொழியப்பட்டது. செவிகள் தூர்த்த என்னும் பலவின்பால் வினைமுற்றுக்கேற்ப, ஓதை என்பதைப்பிரித்துச் சங்கத்தோடும் முரசோடும் கூட்டிச் சங்கின் ஓசையும் முரசின் ஓசையும் தூர்த்தனஎனப் பொருள் கொள்க. தூர்த்தல் என்பது பலமுறை ஒரே பொருளில் வந்தது. சொற்பொருட் பின்வரு நிலை அணி. 78 |