எங்கும் ஒளிவெள்ளம்  

1569. விளக்கு ஒளி மறைத்த, மன்னர்
     மின் ஒளி; மகுட கோடி
துளக்கு ஒளி, விசும்பின் ஊரும்
     சுடரையும் மறைத்த; சூழ்ந்த
அளக்கர் வாய் முத்த மூரல்
     முறுவலார் அணியின் சோதி,
‘வளைக்கலாம்’ என்று, அவ் வானோர்
     கண்ணையும் மறைத்த அன்றே.

     மன்னர்மின் ஒளி - மன்னர்களின் உடம்பின் ஒளிக்கதிர்கள்;
விளக்கு ஒளி மறைத்த - விளக்கின் ஒளியைமறையச் செய்தன;  மகுட
கோடி துளக்கு ஒளி -
மகுடங்களின் தொகுதிகள் அசைதலால் உண்டாகும்
ஒளிக்கற்றைகள்;  விசும்பின் ஊரும் சுடரையும்மறைக்கு- வானத்தில்
செல்லும் சூரியனையும் மறைந்தன;  சூழ்ந்த அளக்கர் வாய்
முத்தமூரல்
முறுவலார்-
பூமியைச் சூழ்ந்துள்ள கடலில் தோன்றிய முத்துப் போன்ற
பற்களையும் புன்னகையையும் உடையபெண்களுடைய; அணியின்
சோதி -
ஆபரணங்களின் ஒளிக்கதிர்கள்;  வளைக்கலாம்என்று-
தேவலோகத்தையும் வளைத்துக் கொள்ளலாம் என்று கருதி; அவ்வானோர்
கண்ணையும் -
அந்தக் தேவர்களின் கண்களையும்; மறைத்த- மறைத்தன;

     கோடி என்பது மிகுதி குறித்தது. ‘மறைத்த’ என்னும் பலவின்பால்
வினைமுற்றுக்கேற்ப ஒளி, சோதி என்பவற்றை  ஒளிக்கதிர்கள் என்று
பன்மையாகக் கொள்ளல் வேண்டும். இன்றேல், ஒருமைபன்மை
மயக்கமாகும். அன்று,  ஏ - அசைகள்.                      79

வசிட்ட முனிவன் வருகை