1570. | ஆயது ஓர் அமைதியின்கண், ஐயனை மகுடம் சூட்டற்கு ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் இயையக் கொண்டு, தூய நான்மறைகள் வேதபாரகர் சொல்ல, தொல்லை வாயில்கள் நெருக்கம் நீங்க, மா தவக் கிழவன் வந்தான். |
ஆயது ஓர் அமைதியின்கண் - அத்தகைய சூழலில்; மாதவக் கிழவன் - பெரிய தவத்தைச் செய்த வசிட்ட முனிவன்; ஐயனை மகுடம் சூட்டற்கு - இராமபிரானைமுடிசூட்டுவதற்கு; ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் - பொருந்திய மங்கலப் பொருள்களாகியஎல்லாவற்றையும்; இயையக் கொண்டு - பொருத்தமுற எடுத்துக்கொண்டு; வேத பாரகத் தூயநான்மறைகள் சொல்ல - வேதங்களைக் கரை கண்டவர்களான அந்தணர்கள் தூய்மையான நான்குவேதங்களை ஓதிவர; தொல்லை வாயில்கள் நெருக்கம் நீங்க - பழைய வாயில்களில்உள்ளவர்கள் நெருக்கத்தை நீங்கி விலகிக்கொள்ள; வந்தான் - முடிசூட்டு மண்டபத்துக்கு எழுந்தருளினான். வசிட்ட முனிவன்மீது உள்ள மரியாதையால் அங்கங்கே வாயில்களில் நின்றவர்கள் விலகிவழிவிட்டனர். வாயில்கள் பழையன எனினும் நெருக்கம் புதியது. வேத பாரகர். - வேதத்தைக்கரை கண்டவர்கள்; பாரம் - அக்கரை. 80 |