தயரதனை அழைத்துவரச் சுமந்திரன் செல்லுதல் 1572. | கணித நூல் உணர்ந்த மாந்தர், ‘காலம் வந்து அடுத்தது’ என்ன, பிணி அற நோற்று நின்ற பெரியவன், ‘விரைவின் ஏகி மணி முடி வேந்தன் தன்னை வல்லையின் கொணர்தி’ என்ன, பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான். |
கணிதநூல் உணர்ந்த மாந்தர் - சோதிட நூலில் துறைபோய சோதிடர்கள்; ‘காலம் வந்து அடுத்தது -முகூர்த்த நேரம் வந்து நெருங்கியது;’ என்ன - என்றுதெரிவித்ததனால்; பிணி அற நோற்று நின்ற பெரியவன் - பிறவிநோய் நீங்கும்படிதவஞ்செய்து அந்நிலையில் வழுவாமல் நின்ற வசிட்ட முனிவன்; விரைவின் ஏகி -வேகமாகச்சென்று; மணிமுடி வேந்தன் தன்னை - இரத்தின் கிரீடம்அணிந்தசக்கரவத்தியை; வல்லையின் கொணர்தி - விரைவில் இங்குக்கொண்டு வருவாய்; என்ன - என்று பணிக்க; பணிதலைநின்ற காதல்சுமந்திரன் - அம்முனிவனது கட்டளையைத் தலைமேற் கொண்டு நின்ற அன்பு நிறைந்தசுமந்திரன்; பரிவின் சென்றான் -அன்போடு விரைந்து சென்றான். வசிட்ட முனிவனுடைய தகுதிகளை நோக்கிப் ‘பெரியவன்’என்றார் நோற்றலினும் அந்நெறி வழுவாது நிற்றல் அருமைத்தாதலின் ‘நோற்று நின்ற’என்றார். ‘குணவாயிற் கோட்டத்து அரசு துறந்து இருந்த’ என்பதில் (சிலப்பதிகம் - 1)‘இருந்த’ என்பது போன்றது ‘நின்ற’ என்னும் இது. 82 |