சுமந்திரன் இராமனை அழைத்தல்  

1575.‘கொற்றவர், முனிவர், மற்றும்
     குவலயத்து உள்ளார், உன்னைப்
பெற்றவன் தன்னைப் போலப்
     பெரும் பரிவு இயற்றி நின்றார்;
சிற்றவைதானும், “ஆங்கே கொணர்க”
     எனச் செப்பினாள்; அப்
பொன் - தட மகுடம் சூடப்
     போதுதி, விரைவின்’ என்றான்.

     ‘கொற்றவ- அரசர்களும்; முனிவர் - இருடிகளும்;மற்றும்
குவலயத்துஉள்ளார் -
பின்னும் இந்நிலவுலகத்தில்  உள்ள மக்களும்;
உன்னைப் பெற்றவன்தன்னைப் போல - உன்னைப்பெற்ற தயரதனைப்
போல;  பெரும் பரிவு இயற்றி நின்றார் -(உன்னிடம்)மிகுந்த அன்பைக்
காட்டி நின்றார்;  சிற்றவைதானும் - சிற்றன்னை
யாகிய கைகேயியும்; 
ஆங்கே கொணர்க எனச் செப்பினாள் - அவனிடம்உன்னை
அழைத்து வருமாறு சொன்னாள்; அப் பொன்தட மகுடம் சூட-
(ஆதலால்) அந்தப் பொன்னால் ஆகியபெரிய முடியை (நீ) சூடுவதற்கு;
விரைவின் போதி - விரைவாக வருவாய்;’ என்றான் -என்று சுமந்திரன்
சொன்னான்.

     கொணர்கென - தொகுத்தல் விகாரம்;  அகரம் தொக்கது.  அவை -
அவ்வை;  தாய்; இடைகுறைந்தது.                                85