1578. | துண்ணெனும் சொல்லாள் சொல்ல, சுடர் முடி துறந்து, தூய மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா முன்னம், வள்ளல் பண் எனும் சொல்லினார்தம் தோள் எனும் பணைத்த வேயும், கண் எனும் கால வேலும், மிடை நெடுங் கானம் புக்கான். |
துண்ணெனும்சொல்லாள் சொல்ல - நடுங்கத்தக்க சொல்லினையுடைய கைகேயி சொல்லுதலால்; வள்ளல் -இராமபிரான்; சுடர் முடி துறந்து - ஒளிபொருந்திய முடிசூடுதலைத் தவிர்ந்து; தூய மண் எனும் திருவை நீங்கி - தூய்மையுடையநிலமகள் என்னும் செல்வியையும் பிரிந்து; வழிக் கொளா முன்னம் - (காடு)செல்லுவதற்கு முன்னரே; பண் எனும் சொல்லினார்தம் - இசைப்பாட்டு என்று சொல்லத்தக்க சொற்களையுடைய பெண்களில்; தோள் எனும் பணைத்த வேயும்- தோள்களாகிய பருத்தமூங்கில்களும்; கண் எனும் கால வேலும் -கண்கள் என்னும் யமனைப் போன்ற வேல்களும்; மிடை நெடுங்கானம்புக்கான் - செறிந்த பெருங்காட்டில் புகுந்தான். பெண்கள் கூட்டம் மொய்த்து நோக்க, இராமபிரான் தேரில் சென்றான் என்பதாம்.பின்வரும் நிகழ்ச்சியை முன்னே பொருந்திக் கூறியுள்ள நயம் கருதத்தக்கது. இவ்வாறு கம்பர்பாடுதலை 20,2828, 3151, 4759 முதலிய பாடல்களாலும் உணரலாம். 88 |