1579. | சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து, வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும்; புண் உற அனங்கன் வாளி புழைத்ததம் புணர் மென் கொங்கை கண் உறப் பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும். |
சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் - (அப்பெண்கள்) நறுமணப் பொடியையும்,பூக்களையும், சந்தனத்தையும், பொன்னையும்; தூவ வந்து - இராமன்மேல் சிதறுவதற்குவந்து; வண்ண மேகலையும் - (தங்கள்) அழகிய மேகலாபரணங்களையும்; நாணும் -நாணத்தையும்; வளைகளும் - வளையல்களையும்; தூவுவாரும் - நெகிழ விடுபவர்களும்; அனங்கள் வாளி புண் உறப் புழைத்த - மன்மதனின் மலரம்புகள் புண் உண்டாகும்படிதுளைத்த; தம் புணர்மென் கொங்கை - தம்முடைய நெருங்கிய மென்மையான தனங்களை; கண் உறபொழிந்த - தங்கள் கண்கள் மிகுதியாகச் சிந்திய; காம வெம்புனல் -காமத்தால் தோன்றிய வெந்நீரால்; கழுவுவாரும் - கழுவுகின்றவர்களும் (ஆகி என ஒருசொல் வருவிக்க) இது குளகம், அடுத்த பாட்டில் வரும் நைவார் என்னும் வினைகொண்டு முடியும். இராமன்மேல்மங்கலப் பொருள்கைளைத் தூவ வந்த மகளிர் அதனை மறந்து இராமன்மீது உண்டான காதலால்தடுமாறி, தங்கள் ஆபரணங்களை நெகிழவிட்டனர். நாணமே மகளிர்க்குச் சிறந்த அணி; அதனையும் அணிகலன்களுடன் சேர்த்துச் சிந்தினர். 89 |