1580. | ‘ “அங்கணண் அவனி காத்தற்கு ஆம் இவன்” என்னல் ஆமோ? நம் கண் அன்பு இலன்’ என்று, உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார். ‘செங் கணும், கரிய கோல மேனியும், தேரும், ஆகி, எங்கனும் தோன்றுகின்றான்; எனைவரோ இராமன்?’ என்பார். |
‘அங்கணன்இவன் - அழகிய கண்களையுடைய இந்த இராமன்; அவனி காத்தற்கு ஆம்- இவ்வுலகைக் காப்பாற்றுவதற்குத்தக்கவன் ஆவான்; என்னல் ஆமோ- என்று கூறுதல்பொருந்துமோ?(பொருந்தாது); நம் கண் அன்பு இலன் - நம்மீது அன்பு இல்லாதவனாக. இருக்கின்றானே;’ என்று - என்று எண்ணி; உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் - மனம் தடுமாறுவதால் உடல் நடுங்கித் துன்புறுவாராகி; ‘செங்கணும் - சிவந்தகண்களும்; கரியகோல மேனியும் - கருநிறம் வாய்ந்த அழகிய திருமேனியும்; தேரும்ஆகி -தேருமாகப் பொருந்தி; எங்கணும் தோன்றுகின்றான் - (இராமன்)எங்குப்பார்த்தாலும் காட்சி தருகின்றான்; இராமன் எனைவரோ - இராமன்வடிவுடையோர் எத்தனை பேரோ;’ என்பார் - என்று வியப்புடன்கூறுவார். நமக்கு அருள் புரியாதவன் எப்படி உலகத்திற்கு அருள்புரிந்து காப்பாற்றப் போகிறான் என்றுமனம் தடுமாறினார்கள் அவன்மீது காதல் கொண்ட பெண்கள். காம மிகுதியால் பார்க்குமிடம்எங்கும் இராமனைக் கண்டனர். இஃது உருவெளித்தோற்றம். 90 |