முனிவர் முதலியோர் நினைப்பும் பேச்சும்  

1581. இனையராய் மகளிர் எல்லாம்
     இரைத்தனர், நிரைத்து மொய்த்தார்;
முனைவரும், நகர மூதூர்
     முதிஞரும் இளைஞர் தாமும்,
அனையவன் மேனி கண்டார்,
     அன்பினுக்கு எல்லை காணார்,
நினைவன மனத்தால், வாயால்
     நிகழ்த்தது, நிகழ்த்தலுற்றாம்;

     மகளிர் எல்லாம் - பெண்கள் எல்லாரும்;  இனையராய் - இத்
தன்மையினராய்; இரைத்தனர் ஆரவாரித்து;  நிரைத்து  மொய்த்தார் -
கூட்டமாகி(இராமபிரானை) நெருங்கினார்கள்;  முனைவரும் - பற்றற்ற
முனிவர்களும்;  நகர மூதூர்முதிஞரும் - அயோத்தி நகரமாகிய அந்தப்
பழைய ஊரில் வாழும் மூத்தவர்களும்;  இளைஞர்தாமும் - சிறியவர்களும்;
அனையவன் மேனி கண்டார் - இராமபிரானது திருமேனி அழகைக்
கண்டு; அன்பினுக்கு எல்லை காணார்- அவன் மீது கொண்ட அன்புக்கு
வரம்பு காணாமல்;  மனத்தால் நினைவன - மனத்தால்
நினைப்பனவற்றையும்;  வாயால்நிகழ்ந்தது - வாயால் கூறியதையும்;
நிகழ்த்தலுற்றாம் - சொல்லத்தொடங்குவோம்.

     இராமபிரான் சிறப்புகள் அனைவரையும்  ஈர்க்க வல்லவனவாதலின்,
பற்றற்ற முனிவர்களும்அவன் முடிசூட்டிக்கொள்வதைக் காண விருப்பம்
கொண்டு வந்தனர் என்பதாம்.  நிகழ்ந்தது -நிகழ்த்தியது; பிறவினை விகுதி
மறைந்துள்ளது.  இதனை அந்தர்ப்பாவிதணிச் என்பர் வடநூலார். கண்டார்,
காணார் - முற்றெச்சங்கள்.                                      91