1582. | ‘உய்ந்தது இவ் உலகம்’ என்பார்; ‘ஊழி காண்கிற்பாய்’ என்பார்; ‘மைந்தே! நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும்’ என்பார்; ‘ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக’ என்பார்; ‘பைந் துழாய்த் தெரியலாய்க்கே நல்வினை பயக்க’ என்பார். |
இவ் உலகம் உய்ந்தது என்பார் - (அவர்களுள்) இந் நிலவுலகம் கரைமரம்சேர்ந்தது என்பார் சிலர்; ஊழி காண்கிற்பாய் என்பார் - நீ ஊழியின் முடிவு கண்டுவாழ்வாய் என்பார் சிலர்; மைந்த - ஐயனே; எங்கள் வாழ்க்கை நாள் யாவும் நீகோடி என்பார் - எங்கள் ஆயுள் முழுவதையும் நீ எடுத்துக்கொள்வாய் என்பார் சிலர்; ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் - நாங்கள் ஐம்புலன்களையும் அடக்கி அரிதாகச் செய்த தவத்தின் பயன்; உனக்கு ஆக என்பார் - உனக்கு அரிதாகச் செய்த தவத்தின்பயன்; உனக்கு ஆக என்பார் - உனக்கு உளதாகுக என்பார் சிலர்; பைந் துழாய்த்தெரியலாய்க்கே - பசிய துளசிமாலையை அணிந்த உனக்கே; நல்வினை பயக்க என்பார் - புண்ணியம் உண்டாவதாக என்பார் சிலர். மக்கள் அனைவரும் தங்கள் ஆர்வம் தோன்ற இராமபிரானை வெவ்வேறு முறையில்வாழ்த்தினர். ‘எங்கள் வாழ்க்கை நாள் யாவும் நீ கோடி” என்பதனோடு “யான் வாழு நாளும்பண்ணன் வாழிய” (புறம். 173) என்பது ஒப்பு நோக்கத் தக்கது. ஐந்து என்னும் முற்றும்மை விகாரத்தால் தொக்கது. 92 |