1583. | ‘உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை, நிறத்தை ஒக்கும் புயல் பொழி மேகம், என்ன புண்ணியம் செய்த’ என்பார்; ‘செயல் அருந் தவங்கள் செய்து, இச் செம்மலைத் தந்த செல்வத் தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது?’ என்பார். |
‘உயர்அருள் ஒண்கண் ஒக்கும் தாமரை - மிகுந்த கருணை நிறைந்த ஒளிபடைத்தஇவன் கண்களைப் போன்ற தாமரை மலரும்; நிறத்தை ஒக்கும் புயல்பொழி மேகம் -திருமேனியின்நிறத்தைப் போன்ற நீரைப் பொழியும் கார் மேகமும்; என்ன புண்ணியம்செய்த என்பார் - என்ன நல்வினை புரிந்தன’ என்று கூறுவார் சிலர்; செயல் அருந் தவங்கள் செய்து - பிறரால் செய்வதற்கு முடியாத தவங்களைச் செய்து; இச் செம்மலைத்தந்த - இந்த நம்பியைப்பெற்று (நமக்குக்) கொடுத்த; செல்வத் தயரதற்கு -பேற்றினையுடையசக்கரவர்திக்கு; தக்கது - அவர் செய்த நன்றிக்குத் தக்கதான; என்ன கைம்மாறு யாம் உடையம்- எந்த மறு உதவி உடையராய் இருக்கின்றோம்?; என்பார்- என்று கூறுவர் சிலர். இராமன் கண்ணழகிலும் மேனியழகிலும் ஈடுபட்டு அவற்றிற்கு உவமையாகும் தகுதிபெற்ற தாமரையையும், மேகத்தையும் புகழ்ந்தனர் சிலர், இராமனைப் பெற்றுத் தந்த தயரதன் தந்தகொடைக்கு ஈடாக எந்தக் கைம்மாறும் நம்மால் செய்ய இயலாது நன்றியால் நிறைந்தனர் சிலர். புயல் - நீருக்கு இலக்கணை. 93 |