1584.‘வாரணம் அரற்ற வந்து,
     கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும், இந்த
     நம்பிதன் கருணை’ என்பார்;
ஆரணம் அறிதல் தேற்றா
     ஐயனை அணுகி நோக்கி,
காரணம் இன்றியேயும்,
     கண்கள் நீர் கலுழ நிற்பார்.

     இந்த நம்பிதன் கருணை - இந்தக் குணங்களால் நிறைந்தவனாகிய
இராமபிரானதுதிருவருள்; வாரணம் அரற்ற வந்து - முதலை வாய்ப்பட்ட
கயேந்திரன் என்னும்  யானைஆதிமூலமே  என்று கதற அங்குத் தோன்றி;
கரா உயிர் மாற்றும் - முதலையின் உயிரைப்போக்கிய;  நேமி நாரணன்
(கருணை) ஒக்கும் - சக்கரப் படையையுடைய திருமாலின்திருவருளை
ஒத்ததாகும்; என்பார்- என்று கூறுவர் சிலர்; ஆரணம் அறிதல் தேற்றா-
மறைகளும் இனையன் என்று அறிய இயலாத;  ஐயனை அணுகி நோக்கி-
(திருமாலாகிய)இராமபிரானை நெருங்கி நன்கு பார்த்து; காரணம்
இன்றியேயும் -
(அன்பு தவிர வேறு) காரணம் இல்லாமலே; கண்கள் நீர்
கலுழ நிற்பார் -
கண்களிலிருந்து நீர் சொரியநிற்பார் சிலர்.

     நாரணன் - நாராயணன் என்பதன் சிதைவு.  நாரணன் என்பதன்
பின்னும் கருணை என்பதனைப்பிரித்துக் கூட்டுக. காரணமின்றிக் கண்ணீர்
சொரிந்தனர் என்பது அவர்களது  பரவசநிலையினைக்காட்டும்.        94