1585. | ‘நீல மா முகில் அனான்தன் நினையினோடு அறிவும் நிற்க. சீலம் ஆர்க்கு உண்டு? கெட்டேன்? தேவரின் அடங்குவானோ? காலமாக் கணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற மூலம் ஆய், முடிவு இலாத மூர்த்தி இம் முன்பன்’ என்பார். |
நீல மா முகில் அனான்தன் - கரிய பெரிய மேகத்தைப் போன்ற இராமபிரானது; நிறையினோடு அறிவு நிற்க - நிறையும் பேரறிவும் ஒருபுறம் இருக்க; சீலம் ஆர்க்கு உண்டு- அவனது நீர்மைக்குணம் வேறு எவருக்கு உண்டு? (ஒருவர்க்கும் இல்லை); இம் முன்பன் -இந்த முன்னவனாகிய இராமபிரான்; தேவரின் அடங்குவானோ - தேவர்களுள் ஒருவனாய் அமைவானோ? (அமையான்); காலமாக் கணிக்கும் - கால அளவாகக் கணக்கிடப்படுகின்ற; நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற - நுட்பமாகிய எண்களையும் கடந்து அப்பால் நின்ற;மூலம் ஆய் - முதற்பொருளாகி; முடிவிலாத மூர்த்தி - அழிவில்லாத பரம்பொருள் ஆவான்; கெட்டேன் - (இதனை உணராமல் இது காறும்) ‘கெட்டேன்’; என்பார் - என்று சொல்வர் சிலர். இராமனுடைய நிறையும் அறிவும் அல்லாமல், நீர்மையே அவனைப் பரம் பொருள் என்பதனைக்காட்டிக்கொடுக்கிறது. அதனை அறியாமல் நாளைப் பழுதே போக்கினேனே’ என்று தனித்தனியேதன்னிரக்கம் கொண்டனர் சிலர். நிறை - தன் நெஞ்சைத் தடுத்து நிறுத்தும் திறன். சீலம் - உயர்த்தார், தாழ்ந்தார்என்னும் வேறுபாடின்றி நீரோடு நீர் கலந்தாற்போல இரண்டறக் கலந்து பழகுதல். இப்பாட்டின்பின்னிரண்டு அடிகளின் கருத்துப் பின்னும் “மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய, காலமும் கணக்கும் நீத்த காரணன்” (1584) என இடம் பெறுதல்காணலாம். 95 |