1586.‘ஆர்கலி அகழ்ந்தோர், கங்கை
     அவனியில் கொணர்ந்தோர், முந்தைப்
போர் கெழு புலவர்க்கு ஆகி
     அசுரரைப் பொருது வென்றோர்.
பேர்கெழு சிறப்பின் வந்த
     பெரும் புகழ் நிற்பது, ஐயன்
தார் கெழு திரள் தோள் தந்த
     புகழினைத் தழுவி’ என்பார்.

     ஆர்கலி அகழ்ந்தோர் - கடலைத் தோண்டியவரும்; கங்கை
அவனியில்கொணர்ந்தோர் -
ஆகாய கங்கையை உலகத்திற்குக்
கொண்டுவந்தவரும்; முந்தை -பழமையாகிய;  போர் கெழு புலவர்க்கு
ஆகி -
(அசுரரோடு) போர்மிக்க தேவர்களுக்குத்துணையாகி; அகரரைப்
பொருது வென்றோர்-
அசுரர்களைப் போரிட்டு வெற்றிபெற்றவரும் (ஆகிய
இக் குலத்து முன்னோர் பலருக்கும்);  பேர் கெழு சிறப்பின் வந்த -
விளங்குகின்ற மேன்மையோடு உண்டாகிய;  பெரும் புகழ் நிற்பது - மிக்க
கீர்த்திநிலைத்து  நிற்பது;  ஐயன் தார்  கெழு - இராமபிரானது
வெற்றிமாலை பொருந்திய;  திரள்தோள்தந்த புகழினை - திரண்ட
தோள்கள் உண்டாக்கிய கீர்த்தியை;  தழுவி -தழுவியே யாம்;  என்பார்.

     ஆர்கலி அகழ்ந்தவர் சகரர்;  கங்கை தந்தோன் - பகீரதன்; அசுரரை
வென்றோர் -ககுத்தன், முசுகுந்தன் முதலியோர். ஐயன் திரள்
தோற்களுக்குத் தாடகைவதம்,  சிவனது வில்லைமுறித்தது,  பரசுராமனை
அடக்கியது. ஆகியவற்றால் புகழ் உண்டாயிற்று. புலவர் -அறிவினையுடைய
தேவர்கள். அசுரர் - சுரர்க்குப் பகைவர்.  சுரர் - தேவர்;  அமுதத்தை
(சுராவை)உண்டவர்.                                           96