1588. | மின் பொருவு தேரின்மிசை வீரன் வரு போழ்தில், தன் பொருவு இல் கன்று தனி தாவி வரல் கண்டாங்கு அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமாபோல், என்பு உருகி, நெஞ்சு உருகி, யார் உருககில்லார்? |
வீரன் - வீரனாகிய இராமன்; மின் பொருவு தேரின்மிசை - மின்னலையொத்த தேரின்மீது ஏறிவரும்போது; ஆ - பகவானது; தன் பொருவு இல் கன்று -தனது ஒப்பற்ற கன்று; தனி தாவி வரல் கண்டாங்கு - தனியே துள்ளிக் குதித்து வருதலைப்பார்த்தபோது; அன்பு உருகு சிந்தையொடும் - அன்பினால் கரைகின்ற மனத்தோடு; உருகுமா போல் - உருகும் வகைபோல; என்பு உருகி - உடம்பு நெகிழ்ந்து; நெஞ்சு உருகி - மனம் உருகி (நிற்பதன்றி); உருககில்லார்யார் - உருகாமல் வன்மையோடுநின்றவர் யார்? (எவரும் இலர்). இராமனைக் கண்ட எல்லாரும் தம்மையறியாமலே அவன்மீது அன்பு தோன்றி உள்ளமும் உடலும்உருகி நிற்பர் என்றவாறு. கண்டாங்கு - தொகுத்தல் விகாரம், அகரம் தொக்கது. உருகுமா போல்- உருகுமாறுபோர்ல; ஆ - ஆறு என்பதன் விகாரம். பின்னிரண்டு அடிகளில் உருகுதல் என்ற சொல் பலமுறை ஒரே பொருளில் வந்தது சொற்பொருட் பின்வருநிலை அணி. 98 |