1591. | ‘தாய் கையில் வளர்ந்திலன்; வளர்த்தது, தவத்தால் கேகயன் மடந்தை; கிளர் ஞாலம் இவன் ஆள, ஈகையில் உவந்த அவ் இயற்கை இது என்றால், தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது?’ என்பார். |
தாய் கையில் வளர்ந்திலன் - இராமபிரான் ஈன்ற தாயாகிய கோசலையின் கையில்வளர்ந்தானில்லை; வளர்ந்தது - அவனை வளர்த்தது; தவத்தால் கேகயன் மடந்தை -முன்செய்த தவப்பயனால் கேகயமன்னன் மகளாகிய கைகேயியை; கிளர் ஞாலம் இவன் ஆள -(அதனால்) விளங்குகின்ற நாட்டினை இவ் இராமன் ஆள; ஈகையில் உவந்த - கொடுப்பதில்(பெற்ற தாய்போல) மகிழ்ச்சியுற்ற; இயற்கை இது என்றால்- (அவளது) தன்மைஇதுவாயின்; தோகை அவள் பேர் உவகை - அக் கைகேயியினது பெருங்களிப்பு; சொல்லல்அரிது - சொல்லுதல் முடியாது; என்பார் - என்று கூறுவார்கள். இராமனை வளர்த்தவன் கைகேயியாதலின் அவளுக்கே மிக்க மகிழ்ச்சி உண்டு என்றனர்சிலர். அவள் இந்நாள் வரை இராமனிடம் பேர்புன் கொண்டவனாய் இருந்தமையை அனைவரும்அறிவராதலின் இவ்வாறு கூறினர். 101 |