1596.புக்கவன் தன்னை நோக்கி,
     புரவலர், முனிவர், யாரும்,
‘தக்கதே நினைந்தான்; தாதை
     தாமரைச் சரணம் சூடி,
திக்கினை நிமிர்ந்த கோலச்
     செங்கதிர்ச் செல்வன் ஏய்ந்த
மிக்கு உயர் மகுடம், சூட்டச்
     சூடுதல் விழுமிது’ என்றார்.

     புரவலர் முனிவர் யாரும் - அரசர்களும், முனிவர்களும் மற்றுள்ள
எல்லோரும்;  புக்கவன் தன்னை நோக்கி - கைகேயியின் மாளிகையில்
எல்லோரும்;  புக்கவன் தன்னைநோக்கி - கைகேயின் மாளிகையில்
புகுந்த இராமபிரானைக் கண்டு;  ‘தக்கதேநினைந்தான் - இராமன்
தகுதியான செயலையே எண்ணினான்;  தாதை தாமரைச் சரணம் சூடி -
தன் தந்தையின் தாமரை மலர் போலும் திருவடிகளை முன்னதாக வணங்கி;
திக்கினில்நிமிர்ந்த கோலச் செங்கதிர் - எல்லாத் திசைகளிலும் உயர்ந்து
தோன்றுகிறதுவடிவுபடைத்த செந்நிறக் கதிர்களைச் செல்வமாக உடைய
சூரியன் தொடங்கி; ஏய்ந்த மிக்குஉயர் மகுடம் - அணிந்த மிக உயர்ந்த
கிரீடத்தை;  சூட்ட - நூல்முறைப்படி அணிவிக்க; சூடுதல் விழுமிது
என்றார் -
தான் அணிந்துகொள்வது  சிறந்தது  என்றார்.

     விழா மண்டபத்தில் இருந்தோர் முடிசூடுவதற்கு முன்னே இராமன்
தந்தையை வணங்கி வாழ்த்துப்பெறப்போகிறான் என்று கருதி அவனைப்
பாராட்டினர்.  தாமரைச் சரணம் - உவமத்தொகை.                  106