இராமபிரான் கைகேயியைச் சந்தித்தல் 1597. | ஆயன நிகழும் வேலை, அண்ணலும் அயர்ந்து தேறாத் தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி, ‘நாயகன் உரையான் வாயால்; நான் இது பகர்வென்’ என்னா, தாய் என நினைவான் முன்னே கூற்று எனத் தமியள் வந்தாள். |
ஆயனநிகழும் வேலை - அப்படிப்பட்டவை நடந்துகொண்டிருக்கும் வேளையில்; அண்ணலும் - இராமபிரானும்; அயர்ந்துதேறா- முதலில் மனம் சோர்ந்து பின்னர்த் தெளிவுற்று; தூயவன் இருந்தசூழல் - நல்லவனானதயரதன் இருந்த இடத்தை; துருவினன் வருதல் நோக்கி- தேடி வருவதைப் பார்த்து; நாயகன் வாயால்உரையான் - கணவன் தன் வாயால் சொல்ல மாட்டான்; நான் இதுபகர்வேன் என்னா- நானே இதனைச் சொல்லுவேன்’ என்று எண்ணிக் கொண்டு; தாய்என நினைவான் முன்னே - தன்னைத் தாய் என்று கருதும் இராமபிரான் முன்னே; கூற்று என -எமன் போல; தமியள்வந்தாள் - நிகரற்ற கொடுமைக்காரியான கைகேயி வந்தாள். அன்பு பொழியும் தாய் என்று கருதுபவன் முன்னே துன்பு தரும் எமன் போல வந்தாள் என்க.‘வாயால்’ என்று வேண்டாது கூறினார். இராமனுக்கு நன்மை பயப்பனவற்றையே சொல்லிப் பழகியவாய் என்று அறிவித்தற்கு. இது என்றது. அவள் பெற்ற இருவரங்களைத் தெரிவித்தலைச் சுட்டியது. 107 |