இராமபிரான் கைகேயியைவணங்குதல் 1598. | வந்தவள் தன்னைச் சென்னி மண் உற வணங்கி, வாசச் சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து, மற்றைச் சுந்தரத் தடக் கை தானை மடக்குறத் துவண்டு நின்றான்- அந்தி வந்து அடைந்த தாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான். |
அந்தி வந்து அடைந்த - மாலைப்பொழுதில் வந்து சேர்ந்த; தாயைக் கண்ட ஆன்கன்று அன்னான்- தாய்ப்பசுவைக் கண்ட பசுவின் கன்றைப் போன்ற இராபிரான்; வந்தவள் தன்னை - தன் முன்னே வந்த அக்கைகேயியை; சென்னி மண் உற வணங்கி -நெற்றி தரையில் பொருந்த விழுந்து வணங்கி; வாசச் சிந்துரப் பவளச் செவ்வாய்-மணம் வீசுவதும் சிந்தூரத்தையும் பவளத்தையும் போன்ற சிவந்த வாயை; செங் கையின்புதைத்து - சிவந்த (வலக்) கையால் பொத்திக்கொண்டு; மற்றைச் சுந்தரத் தடக் கை -மற்றொன்றாகிய அழகுபொருந்திய பெரிய இடக் கையானது; தானை மடக்குற - ஆடையைமடக்கிக்கொள்ள; துவண்டு நின்றான் - வணங்கி நின்றான். இப்பாட்டு இராமபிரானுடைய அடக்கத்தைக் காட்டுகிறது. அடக்கம் என்பது உயர்ந்தோர்முன்பணிந்த மொழியும், தணிந்த நடையும், தாளை மடக்கலும், வாய் புதைத்தலும், தலைதாழ்த்திநிற்றலும் கொண்டு அடங்கியொழுகுதலாம். இராமபிரான் அடக்கத்திற்கு விளக்கம் தருவதுபோல நிற்றல் போற்றி மகிழத்தக்கது. சென்னி ஈண்டு இலக்கணையாய நெற்றியைக் குறித்தது. இன உருபுபொருளில் வந்தது. 108 |