கூற்றம் அன்ன கைகேயி கூற்று  

1599.நின்றவன்தன்னை நோக்கி,
     இரும்பினால் இயன்ற நெஞ்சின்
கொன்று உழல் கூற்றம் என்னும்
     பெயர்இன்றிக் கொடுமை பூண்டாள்,
‘இன்று எனக்கு உணர்த்தல் ஆவது
     ஏயதே என்னின், ஆகும்:
ஒன்று உனக்கு உந்தை, மைந்த!
     உரைப்பது ஒர் உரை உண்டு’ என்றாள்.

     இரும்பினால் இயன்ற நெஞ்சின்- இரும்பினால் ஆகிய மனத்தோடு;
கொன்று உழல்கூற்றம் என்னும் பெயர் இன்றி - உயிர்களைக் கொன்று
திரியும் எமன் என்னும்பெயர்மட்டும் இல்லாமல்; கொடுமை பூண்டாள் -
அவனுடைய கொடுந்தன்மையைமேற்கொண்டவளாகிய கைகேயி; ‘மைந்த -
மகனே;  உந்தை உனக்கு உரைப்பது -உன் தந்தை உனக்குச்
சொல்வதாகிய;  ஓர் உரை ஒன்று உண்டு - சொல் ஒன்று உள்ளது;
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயது என்னில் - இப்பொழுது
எனக்கு (உன்னிடம் அதைச்)சொல்வது  பொருத்தமானது என்று நீ
கருதினால்; ஆகும் என்றாள் - நான் அதனைத்தெரிவிக்கலாம் என்றாள்.

     கைகேயி தான் சொல்லப்போவது இன்னாத சொல்லாதலின் அதனை
விரையக் கூறாது, இராமனுடையஇசைவு பெற்றுத் தெரிவிக்க எண்ணி
நயமாகப் பேசுகிறாள். இது கைகேயியின் வஞ்சக மனத்தைக்காட்டுகிறது. 109