இராமனின் பணிவுரை 1600. | ‘எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவது உண்டேல், உய்ந்தனென் அடியேன்; என்னின் பிறந்தவர் உளரோ? வாழி! வந்தது, என் தவத்தின் ஆய வரு பயன்; மற்று ஒன்று உண்டோ? தந்தையும், தாயும், நீரே; தலைநின்றேன்; பணிமின்’ என்றான். |
‘எந்தையேஏவ - என் தந்தையாரே கட்டளைவிட; நீரேஉரை செய இயைவது உண்டேல்- (அதனை) நீரே தெரிவிக்க இசைவதானால்; அடியேன் உய்ந்தனென் - நான்ஈடேறிவிட்டேன்;என்னின் பிறந்தவர் உளரோ - என்னைச் காட்டிலும் (மேன்மைஅடையும்படி) பிறந்தவர் வேறொருவர் இருக்கின்றாரோ? (இல்லை); என் தவத்தின்ஆய பயன் வந்தது -என்முன்னைத் தவத்தால் உண்டாகிய பயன் வந்துவிட்டது; வரு பயன் மற்று ஒன்று உண்டோ? - இதனினும் சிறந்ததாக வரக்கூடிய நற்பயன் பிறிதொன்று உள்ளதோ? (இல்லை); தந்தையும்தாயும் நீரே - எனக்கு நன்மையானவற்றைச்செய்யும் தகப்பனும், இனிமையானவற்றைச்செய்யும் தாயும் நீரே ஆவீர்; தலைநின்றேன் பணிமின் என்றான் - நீர்சொல்லப்போவதைத் தலைமேற் கொண்டு நின்றேன் கட்டளையிடுங்கள்;’ என்றான்-. இதனால் தாய் தந்தையரிடம் இராமன் காட்டிய மரியாதை புலப்படுகிறது. நீரே - பிரிநிலைஏகாரம் . வாழி - முன்னிலை அசை. தலைநின்றேன் - கால வழுவமைதி; தெளிவுபற்றிஎதிர்காலம் இறந்த காலமாயிற்று. பயன் - இடைநிலை விளக்காக நின்று முன்னும் பின்னும் இயைந்தது. 110 |