1603. தெருளுடை மனத்து மன்ன
     ஏவலின் திறம்ப அஞ்சி,
இருளுடை உலகம் தாங்கும்
     இன்னலுக்கு இயைந்து நின்றான்,
உருளுடைச் சகடம் பூண்ட,
     உடையவன் உய்த்த கார் ஏறு
அருளுடை ஒருவன் நீக்க
     அப் பிணி அவிழ்ந்தது ஒத்தான்.

     தெருள் உடை மனத்து - தெளிவு பொருந்திய நெஞ்சினையுடைய;
மன்னன் ஏவலின்திறம்ப அஞ்சி- தயரத மன்னனின் கட்டளையிலிருந்து
மாறுபடுவதற்குப் பயந்து;  இருள்உடை உலகம் தாங்கும் - துன்ப இருள்
நிறைந்த உலகத்தைத் தாங்குகின்ற;  இன்னலுக்குஇயைந்து நின்றான் -
துன்பத்திற்கு ஒருப்பட்டு நின்றவனாகிய இராமன்;  உருள் உடைச்சகடம்
பூண்ட -
சக்கரத்தையுடைய வண்டியில பூட்டப்பட்ட; உடையவன் உய்த்த
கார் ஏறு -
உடையவனாலே செலுத்தப்பட்ட  கரிய காளையானது;  அருள்
உடை ஒருவன் நீக்க -
கருணையையுடைய ஒருவன் வண்டியிற் பூட்டிய
பூட்டினை அவிழ்த்து விட;  அப் பிணி அவிழ்ந்ததுஒத்தான் - அப்
பிணிப்பிலிருந்து  விடுபட்டதைப் போல ஆனான்.

     அரசபாரத்தை வண்டியாகவும், அதனைச் சுமப்பவனை வண்டியிற்
பூட்டிய காளையாகவும்  கூறுதல்மரபாதலால், அரசச் சுமையை நீங்கிய
இராமன் வண்டிச் சுமையை நீங்கிய எருதுபோல வருத்தம்நீங்கி இருந்தனன்
என்றவாறு.  இஃது  உவமை அணி.  சகடம் - அரசாட்சி;  உடையவன் -
தயரதன்;கார் ஏறு - இராமன் இருள் - இடத்து  நிகழ் பொருளின் தன்மை
இடத்தின்மேல் ஏற்றிஉரைக்கப்பட்டது.  நின்றான் - வினையாலணையும்
பெயர்.                                                      113