1607. ‘புனைந்திலன் மௌலி; குஞ்சி
     மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?’ என்னும்
     ஐயத்தாள் நளின பாதம்.
வனைந்த பொன் கழற்கால் வீரன்
     வணங்கலும், குழைந்து வாழ்த்தி,
‘நினைந்தது என்? இடையூறு உண்டோ
     நெடு முடி புனைதற்கு?’ என்றாள்.

     ‘மௌலி புனைந்திலன் - மகுடம் சூடவில்லை; குஞ்சி - தலைமுடி;
மஞ்சனப் புனித நீரால் நனைந்திலன் - அபிடேகமாகிய தூய நதிகளின்
தண்ணீரால் நனையப்பெற்றான்இல்லை; என்கொல்?’ - என்ன காரணம்;
என்னும் ஐயத்தாள் -என்கின்ற சந்தேகத்தை  உடையவளாக இருக்கின்ற
கோசலைத்தாயின்;  நளின பாதம் -தாமரையாகிய அடிகளை; வனைந்த
பொன் கழற்கால் வீரன் வணங்கலும் -
பொன்னாற்செய்யப்பெற்ற
வீரக்கழல் அணிந்த இராமன் வணங்கிய அளவில்; குழைந்து வாழ்த்தி -
மனம் உருகி ஆசி கூறி;  ‘நினைந்தது என்?’ - சக்கரவர்த்தி எண்ணிய
செயல்என்னாயிற்று;  நெடுமுடி புனைதற்கு இடையூறு  உண்டோ? -
உயர்ந்த மகுடத்தைச் சூடுதற்குஏதேனும் தடை உளதோ;’  என்றாள் -
என்று கேட்டாள்.

     குஞ்சி - ஆடவர் தலைமுடி.  மகனை முதல் வாழ்த்தினாள், பின்னர்
வினவினாள் என்பதுஅறியற்பாலது.                                2