கலிவிருத்தம்

1608.மங்கை அம் மொழி கூறலும், மானவன்
செங் கை கூப்பி, ‘நின் காதல் திரு மகன்,
பங்கம் இல் குணத்து எம்பி, பரதனே,
துங்க மா முடி சூடுகின்றான்’ என்றான்.

     மங்கை - கோசலை;  அம்மொழி கூறலும் - ‘நெடுமுடி புனைதற்கு
இடையூறுஉண்டோ?’ என்ற அந்த வார்த்தையைச் சொல்லிய உடன்;
மானவன் - பெருமை குறையாதஇராமன்;  செங்கை கூப்பி - (தாயைச்)
சிவந்த கைகளைக் கூப்பித் தொழுது; ‘நின்காதல் திருமகன் -
உன்னுடைய அன்பிற்குரிய சிறந்த புதல்வன்;  பங்கம் இல் குணத்து
எம்பி -
குற்றமற்ற  குணநலன்களை உடைய என் தம்பி;  பரதனே -;
துங்க மாமுடி சூடுகின்றான்’ -
பரிசுத்தமான சிறந்த முடியைச்
சூடப்போகிறான்;’  என்றான் -.

     தாயிடத்துக் கூறுகின்றான் ஆதலின், அவள் வேற்றுமை இன்றிஉணர
வேண்டி முன்னதாகவே ‘நின்காதல் திருமகன்’ ‘பங்கம் இல் குணத்து எம்பி’
என்றெல்லாம்இராமன் எடுத்துக் கூறினான்.  பரதன் என்ற சொல்லுக்கு
நாட்டைப் பரிப்பவன்’  தாங்குபவன்என்பது பொருள். அப்பெயர்க்கேற்ப
அவன் ஆட்சி உரிமை  எய்தியது  உணர்ந்து இன்புறற்குரியது.         3