1611.தாய் உரைத்த சொல் கேட்டுத் தழைக்கின்ற
தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்,
‘நாயகன், எனை நல் நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு, ஒர் பணி’ என்று இயம்பினான்.

     தாய் உரைத்த சொல் கேட்டு - தாயாகிய கோசலை கூறிய
சொற்களைக் கேட்டு; தழைக்கின்ற - மகிழ்ச்சி அடைகின்ற; தூய சிந்தை-
தூய்மையான மனம் உடைய;  அத் தோம் இல் குணத்தினான் - அந்தக்
குற்றம் இல்லாத குணத்தை உடைய இராமன்; (அவளைநோக்கி) ‘நாயகன்-
தயரதச் சக்கரவர்த்தி; எனை நல்நெறி உய்ப்பதற்கு - என்னை நல்ல
வழியில் செலுத்துவதற்கு; ஏயது - ஏவிய;  ஓர் பணி உண்டு’ -  ஒரு
கட்டளை உள்ளது;  என்று இயம்பினான் - என்று சொன்னான்.

     கானகம் ஏகச் சொன்னான் என்று முதலிற் கூறாமல்  ‘நன்னெறி
உய்ப்பதற்கு’ என்று கூறியது தாயின் மனத்தைத் திடப்படுத்தக் கூறியதாக
அமைந்து  அழகு செய்கிறது.  இங்கம் தந்தைஎன்னாமல் ‘சக்கரவர்த்தி’
என்னும் பொருளில் ‘நாயகன்’ என்றது  காண்க. பரதனைப் பற்றிக்கோசலை
கூறிய சொற்கள் இராமனை மகிழ்ச்சியில் ஆழ்த்தின என்பது  இராமனின்
குண அழகைமேலும்  ஒளிவிடச் செய்வதாம்.                       6