1612. | “ஈண்டு உரைத்த பணி என்னை” என்றவட்கு. ‘ “ஆண்டு ஓர் ஏழினொடு ஏழ், அகன் கானிடை, மாண்ட மா தவத்தோருடன் வைகி, பின், மீண்டு நீ வரல் வேண்டும்” என்றான்’ என்றான். |
‘ஈண்டு - இவ்விடத்தில்; உரைத்த - (சக்கரவர்த்தி உனக்குச்) சொல்லிய; பணி என்னை’ - கட்டளை யாது; என்றவட்கு - என்று கேட்டகோசலைக்கு; ஓர் ஏழினோடு ஏழ் ஆண்டு - ஒரு பதினான்கு ஆண்டுக் காலம்; அகன்கானிடை - அகன்ற காட்டிடத்தில்; மாண்ட - மாட்சிமை பொருந்திய; மாதவத்தோருடன் - முனிவர்களுடன்; வைகி - தங்கி; பின் - பிறகு; நீ மீண்டு வரல் வேண்டும் - நீ திரும்பி வருதல் வேண்டும்; என்றாள்’ - என்று கூறினான்; என்றான் -. கோசலை வருந்தாதிருக்கக் ‘காட்டிற்கு அனுப்பி விட்டான்’என்று கூறாமல், முனிவர்களுடன் தங்கித் திரும்பிவருதல் வேண்டும் என்று நாயகன் பணித்தான்என்ற இராமன் சொல்திறம் போற்றுதற்குரியது. ஈண்டு - முன்னிலையிடத்தின் கண் வந்தது. 7 |