கோசலை துயரம்  

1613.ஆங்கு, அவ் வாசகம் என்னும் அனல், குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்,
ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள்; மனம்
வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் அரோ.

     ஆங்கு - அப்பொழுது; அவ் வாசகம் என்னும் அனல் - (இராமன்
காடு செல்லவேண்டும் என்று தயரதன் கூறிய) அந்த வார்த்தை என்கிற
நெருப்பு;  குழை தூங்கு தன் செவியில்தொடராமுனம் - காதணி
அசைகின்ற தன்னுடைய காதுகளில் வந்து  விழுதற்கு முன்னமே (கோசலை);
ஏங்கினாள்;  இளைத்தாள்; திகைத்தாள் - இரங்கி,  மெலிந்து, தடுமாறி;
மனம்வீங்கினாள்;  விம்மினாள்; விழுந்தாள் - மனம் வீங்கி, வருந்தி,
மயக்கமுற்றுக்கீழே விழுந்தாள்.

     ‘வாசகம் என்னும் அனல்’  என்பது,  ‘ஊர் எனப்படுவது உறையூர்’
என்றார்போல வாசகத்தின்கொடுமை உணர்த்தி நின்றது. நெருப்புச்
சேர்த்தாரைச் சுடும்,  இவ்வாசகம் சேராமுன்னமே சுடும்தன்மை படைத்தது
என்பதாம். தூங்குதல் - தொங்கதல்; காதில் இறுக அணிவது தோடு; தொங்க
அணிவது  குழை;  தொங்கூட்டம் என்று இவ்வணியைக் கூறுவர். ‘அரோ’
ஈற்றசை.                                                      8