1616.‘நன்று மன்னன் கருணை’ எனா நகும்;
நின்ற மைந்தனை நோக்கி, ‘நெடுஞ் சுரத்து
என்று போவது? எனா எழும்; இன் உயிர்
பொன்றும் போது உற்றது உற்றனள் போலுமே.

     ‘மன்னன் கருணை நன்று’ எனா நகும் - ‘சக்கரவர்த்தி உன்பால்
காட்டிய இரக்கம்மிக நன்றாய் இருந்தது’ என்று சிரிப்பாள்; நின்ற
மைந்தனை நோக்கி -
தன் எதிரேநின்ற இராமனைப் பார்த்து; ‘நெடுஞ்
சுரத்துப் போவது என்று’  எனா  எழும் -
நீண்டகாட்டு வழியில்
போவது எப்போது என்று சொல்லி எழுந்திருப்பாள்;  இன் உயிர்
பொன்றும்போது  உற்றது -
இனிய உயிர் போகும்போது அடைகின்ற
மரண வேதனையை;  உற்றனள் போலும் - தற்போது அடைந்தாள் போல
ஆனாள்.

     தானும் உடன் செல்வாள்போல எழுவாளாயினள் என்க. சாவுத்துயர்
அடைந்தாள் என்பதாம். ‘ஏ’ஈற்றசை.                              11