1621.‘சிறந்த தம்பி திரு உற, எந்தையை
 மறுந்தும் பொய் இலன் ஆக்கி, வனத்திடை
உறைந்து தீரும் உறுதி பெற்றேன்; இதின்,
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ?

     ‘சிறந்ததம்பி திரு உற - (என்னிலும்) சிறந்த தம்பியாகிய பரதன்
அரசச்செல்வம் பெற; எந்தையை - என் தந்தையாகியதயரதனை;
மறந்தும் பொய் இலன்ஆக்கி - மறப்பினாலும்பொய் சொல்லாத சத்திய
வாக்கினனாகச் செய்து;  வனத்திடை -காட்டில்; உறைந்து தீரும் உறுதி
பெற்றேன் -
வசித்துத் திரும்பி வருகின்ற நன்மையைஅடைந்தேன்;
இதின் - இதைக்காட்டிலும்; யான்பிறந்து
பெறும்பேறு என்பது
யாவதோ?’ -
 யான் பிறவி எடுத்துப் பெறுகின்ற பாக்கியம் என்பது வேறு
என்ன இருக்கிறது; (இல்லை).

     ‘பங்கம் இல் குணத்து  எம்பி’ என்றது (1608.) போல இங்கும் ‘சிறந்த
தம்பி’  என்றதுகாண்க.  ‘யாவதோ’ ஓகாரம் வினாப் பொருளில் வந்தது.
இனி, யாவது  என்பதே வினாவாதலின்,‘ஓ’ காரம் எதிர்மறை குறித்தது 
எனினும் ஆம்.                                                16