கோசலை வேண்டுகோளை இராமன் மறுத்துரைத்தல் 1624. | ‘என்னை நீங்கி இடர்க் கடல் வைகுறும் மன்னர் மன்னனை வற்புறுத்தாது, உடன் துன்னு கானம் தொடரத் துணிவதோ? அன்னையே! அறம் பார்க்கிலை ஆம்’ என்றான். |
‘அன்னையே! - தாயே; என்னை நீங்கி - என்னைப் பிரிந்து; இடர்க்கடல் வைகுறும் - துன்பக்கடலில் தங்கியுள்ள; மன்னர் மன்னனை -சக்கரவர்த்தியை; வற்புறுத்தாது - மன உறுதி செய்து தைரியப்படுத்தாமல்; உடன் -என்னோடு; துன்னு கானம் - நெருங்கிய காட்டிற்கு; தொடர - பின்பற்றிவர; துணிவதோ? - மனத்தில் நிச்சயிப்பது தகுமோ; அறம் பார்க்கிலை ஆம்! - மனைவிக்குள்ள தருமத்தை ஆராய்ந்து கருதவில்லை போலும்;’ என்றான் -. மனைவியின் தர்மம் கணவனைக் காத்தல். ‘தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற,சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்றார் வள்ளுவரும். (குறள். 56) இந்தப் பத்தினிதர்மத்தை இராமன் தன் தாய்க்கு நினைவு படுத்தினான். 19 |