இராமன் சுமித்திரை மாளிகை அடைதல்  

1633.போகின்றாளைத் தொழுது, புரவலன்
ஆகம் மற்று அவள்தன்னையும் ஆற்றி, இச்
சோகம் தீர்ப்பவள்’ என்று, சுமித்திரை
மேகம் தோய் தனிக் கோயிலை மேயினான்.

     (இராமன்) போகின்றானைத் தொழுது - செல்கின்ற கோசலையை
வணங்கி; புரவலன்ஆகம் மற்று அவள் தன்னையும் - தயரதனது
உடம்பையும் கோசலையையும்; ஆற்றி -துன்பத்திலிருந்து  ஆறுதல்
அடையச் செய்து;  இச்சோகம் தீர்ப்பவள்’ - இந்தத் துயரநிலையை
நீக்கக்கூடியவள்;  என்று - எனக் கருதி;  சுமித்திரை -சிற்றன்னையாகிய
சுமித்திரையின்;  மேகம் தோய் தனிக்கோயிலை - மேகம்தங்குகின்ற 
உயர்ந்த ஒப்பற்ற  மாளிகையை;  மேயினான் - அடைந்தான்.

     ‘புரவலனது ஆகமாகிய மற்றவள்’ எனவும் உரைப்பர். ‘மன்னன் உயி்ர்
அவள் உடல்’என்றார்.                                        28

கோசலை தயரதன் நிலை கண்டு புலம்புதல்