1634.நடந்த கோசலை, கேகய நாட்டு இறை
மடந்தை கோயிலை எய்தினள்; மன்னவன்
 கிடந்த பார்மிசை வீழ்ந்தனள் - கெட்டு உயிர்
உடைத்த போழ்தின் உடல் விழுந்தென்னவே.

     நடந்த கோசலை - தயரதன் இருக்கும் இடத்துக்கு நடந்து  சென்ற
கோசலை;  கேகயநாட்டு இறை மடந்தை - கேகய நாட்டு மன்னனுக்கு
மகளாகிய கைகேயியின்;  கோயிலை -மாளிகையை; எய்தினள் -
அடைந்தாள்;  மன்னவன் கிடந்த பார்மிசை - தயரதன்விழுந்து
கிடக்கின்ற  மண்ணில்;  உயிர் கெட்டு உடைந்த போழ்தின் - உயிர்
கெட்டுச்சிதறிய காலத்து; உடல் விழுந்து  என்னவே - உடலானது கீழே
விழுந்தாற் போல;  வீழ்ந்தனள் - விழுந்தாள்.                    29