1637. ‘திரை ஆர் கடல் சூழ் உலகின்
     தவமே! திருவின் திருவே!
நிரை ஆர் கலையின் கடவே!
     நெறி ஆர் மறையின் நிலையே!
கரையா அயர்வேன்; எனை, நீ,
     கருணாலயனே! “ என்?” என்று
உரையா இதுதான் அழகோ?
     உலகு ஏழ் உடையாய்!’ என்னும்.

     ‘திரைஆர் கடல்சூழ் உலகின் தவமே! - அலை பொருந்திய
கடலாற் சூழப்பெற்றஉலகம் செய்த தவத்தின் பயனே;  திருவின்
திருவே!-செல்வங்களுக்கெல்லாம்மேலான செல்வமே; நிரை ஆர்
கலையின் கடவே! -
ஒழுங்குபொருந்திய கல்விக்கலையில் கடல்
ஆனவனே;  நெறி ஆர் மறையின் நிலையே! -நீதிபொருந்திய
வேதத்தின் உன்மைப் பொருளே;  கருணாலயனே! -அருட்கோயிலாக
உள்ளவனே; உலகு ஏழ் உடையாய்! - ஏழ் உலகங்களையும்உடையவனே;
கரையா அயர்வேன் எனை -மனம் உருகிச் சோர்வடைகின்ற என்னை;
நீ என் என்று  உரையா இதுதான் அழகோ’ - நீஏன்வருந்துகிறாய்
என்று ஆறுதல் கூறாது இப்படிக் கிடப்பதுதான் அழகாகுமோ; என்னும்-

     தன் மனைவிபடும் துயரத்தைக் கண்டுவைத்தும் எழுந்து அவளுக்கு
ஆறுதல் சொல்லாது  கணவன்கிடக்கின்ற நிலை கண்டு மனம்  வருந்திப்
புலம்பினாள்.                                                 32