பரதன் ‘தந்தை எங்குளார்’ என்று கேட்டல் 2144. | ‘மூண்டு எழு காதலால், முளரித் தாள் தொழ வேண்டினென், எய்தினென், உள்ளம் விம்முமால்’ ஆண் தகை நெடு முடி அரசர் கோமகன் யாண்டையான்? பணித்திர்’ என்று, இரு கை கூப்பினான். |
(பரதன் கைகேயியைப் பார்த்து) ‘மூண்டு எழு காதலால் - என் உள்ளத்திலிருந்து மேல் எழும்புகின்ற பெரு விருப்பத்தால்; முளரித் தாள் தொழ - (தயரத மன்னனது)தாமரையாகிய திருவடிகளை வழிபட; வேண்டினென்- விரும்பி; எய்தினென்-வந்துள்ளேன்; உள்ளம் விம்மும்- (தந்தையைக் காண) மனம் துடிக்கிறது; ஆண்தகை நெடுமுடிஅரசர் கோமகன் - ஆடவர் திலகமாய அருங்குணம் உடைய நீண்ட மகுடம் அணிந்த மன்னர்மன்னனாகிய தயரதன்; யாண்டையான்? - எவ்விடத்தான்?; பணித்திர்’ -சொல்லுங்கள்;’ என்று -; இரு கை கூப்பினான் - இரண்டு கைகளையும் குவித்துத் தாயைவணங்கினான். பணித்திர் - உயர்வொருமை. அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அரசு வீற்றிருந்தவன்ஆதலின் ‘நெடுமுடி’ என்றார். தயரதனைத் தேடிக் கண்டிலன்; நகருட் புகுந்தவுடன் ‘அருப்பம்’அன்று இது’ என்று ஐயம் உற்றனன். ஆதலான். தந்தையைக் காண மூண்டு எழு காதல் அவன்பால் உண்டாகியது; உள்ளம் விம்மியது என அறிக. ‘ஆல்’ அசை நிலை. 43 |