வசிட்டன் கருதுதல்  

1640.‘இறந்தான் அல்லன் அரசன்;
     இறவாது ஒழிவான் அல்லன்;
மறந்தான் உணர்வு’ என்று உன்னா,
     ‘வன் கேகயர்கோன் மங்கை
துறந்தாள் துயரம் தன்னை;
     துறவாது ஒழிவாள் இவளே;
பிறந்தார் பெயரும் தன்மை
     பிறரால் அறிதற்கு எளிதோ,

     ‘அரசன்இறந்தான் அல்லன் - தசரத மன்னன் உண்மையில் இறப்பு
அடையவில்ாலை; இறவாது ஒழிவான் அல்லன் -இனிச் சாவாமல்
இருப்பவனும் இல்லை;  உணர்வு  மறந்தான்’ -நினைவுஇழந்து 
மூர்ச்சித்தான்;  என்று உன்னா -  என்றுதன் மனத்தில் கருதி;
‘வன்கேகயர் கோன் மங்கை துயரம் தன்னைத் துறந்தாள் -வலிய
கேகய நாட்டு அரசன் மகளாகிய கைகேயியோ துன்பம் இல்லாமல்
இருக்கிறாள்; இவளேதுறவாது ஒளிவாள் - இக்கோசலையோதுன்பத்தால்
விடாமல் அழுகிறாள்;  பிறந்தார்பெயரும் தன்மை -உலகத்துப்
பிறந்தவர்கள் நிலை வேறுபடுகின்ற இயல்பு; பிறரால்அறிதற்குஎளிதோ?-
மற்றொருவரால் அறியக் கூடியதோ (இல்லை என்றபடி).

     கைகேயி துன்பமற்றிருப்பதால் அவள் மனம் மாறியபடி கண்டு
வசிட்டன் இவ்வாறு கூறினான்என்க. அரசன் பிரக்ஞை இழந்திருப்பதும்,
இனி நிச்சயம் இறந்து படுவான் என்பதும் உணர்ந்தவசிட்டன், அவ்விடத்தே
கைகேயி துக்கமின்றி இருப்பதும்,  கோசலை வருந்திப் புலம்புவதும்கண்டு
கைகேயி இந்நிலைக்குக் காரணமாயிருந்தல் வேண்டும்  என உய்த்துணர்ந்து
உலகிற்பிறந்தார் மனம் வேறுபடல் யாராலும் அறியமுடியாது.  நேற்றுவரை
மன்னன்பால் பெருங்காதலுடையகைகேயி இன்று அவன் மூர்ச்சிக்கவும்
வருந்தாதுள்ளபடியால் யாருடைய மனம் எப்போது எப்படிமாறுபடும்
என்பதை அறிய இயலாது என்று கருதி மேலும் கைகேயியை வினாவச்
செல்கிறான் என்று அடுத்தசெய்யுளில் தொடருமி.  அறுபதினாயிரம்
ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்திய மன்னவன் இறந்துபடும்நிலை
கிட்டியது கண்டு ‘பிறந்தார் பெயருந்தன்மை பிறரால் அறிதற்கெளிதோ’
என்றான் எனலும்ஆம். இங்கே பிறந்தார் பெயர்தல் என்பது  பிறந்தவர்
இறத்தலாம்.                                                 35