கைகேயி வசிட்டனிடம் நிகழ்ந்தவை கூறல்  

1641.என்னா உன்னா, முனிவன்,
     ‘இடரால் அழிவாள் துயரம்
சொன்னாள் ஆகாள்’ என, முன்
     தொழு கேகயர்கோன் மகளை,
‘அன்னாய்! உரையாய்; அரசன்
     அயர்வான் நிலை என்?’ என்ன,
தன்னால் நிகழ்ந்த தன்மை
     தானே தெரியச் சொன்னாள்.

     முனிவன் என்னா உன்னா - வசிட்டன் இவ்வாறு கருதி; ‘இடரால்
அழிவாள்துயரம் சொன்னாள் ஆகாள்’ என -
துன்பத்தால்
வருந்துபவளாகிய கோசலை துயர்க்குரியகாரணத்தைச் சொல்லுதற்கு
இயலாள் எனக் கருதி; முன் தொழு கேகயர் கோன் மகளை -தன்னை
முன்வந்து வணங்குகின்ற கைகேயியை; ‘அன்னாய்! - தாயே; அயர்வான்
அரசன்நிலை என்? உரையாய்’ என்ன -
மூர்ச்சித்துச் சோர்ந்துள்ள
வனாகிய சக்கரவ்ர்த்தியின்நிலைக்குக் காரணம் என்ன, சொல்வாயாக என்று
கேட்க;  தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானேதெரியச் சொன்னாள் -
(அவள்) தன்னால் உண்டாகிய செயல்கள் எல்லாவற்றையும் தானே
(முனிவனுக்கு) நன்கு விளங்கும்படி சொன்னாள்.

     கோசலையால் சொல்ல இயலாது என்று கருதி, துயரற்றவளாக உள்ள
கைகேயியை வினாவினான்வசிட்டன் என்க. அரசனது நிலைக்குக் காரணம்
கைகேயியாக இருக்கலாம் என்னும் ஐயம் முனிவனுக்குஇருக்கலாம் அன்றி
அவள்தான் என்னும் உறுதி  முன் இல்லாமையால் அறிந்து வினாவினான்
ஆகாமைஅறிக.                                              36