1644. | காணா, ‘ஐயா! இனி, நீ ஒழிவாய் கழி பேர் அவலம்; ஆண் நாயகனே, இனி, நாடு ஆள்வான்; இடையூறு உளதோ? மாணா உரையாள், தானே தரும்; மா மழையே அனையான் பூணாது ஒழிவான் எனின், யாம் உளமோ? பொன்றேல்’ என்றான். |
காணா - அரசன் மூர்ச்சை தெளிந்தது கன்டு; ‘ஐயா! - ஐயனே; நீ இனிகழிபோர் அவலம் ஒழிவாய் - நீ இனிமேல் இம்மிகப் பெரிய துன்பத்தை நீக்கிக்கொள்வாயாக; ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் - புருஷோத்தமனாகிய இராமனே இனிஇந்நாட்டை ஆட்சி செய்வான்; இடையூறு உளதோ? - அதற்கு வேறு இடையூறு ஏதேனும் இருக்கின்றதா, இல்லை; மாணா உரையாள் - மாட்சியை இல்லாத வார்த்தையாகியவரத்தைக் கேட்ட கைகேயியானவள்; தானே தரும் - (அரசைத்) தானே இராமனக்குத்திருப்பித் தருவாள்; மாமழையே அனையான் - பெரிய மேகத்தை ஒத்தவனாகிய இராமன்; பூணாது ஒழிவான் எனின் - அரசை மீண்டும் மேற் கொள்ளாது போவானாயின்; யாம் உளமோ?- நாங்களும் இருக்கப் போகிறோமா; பொன்றேல்! - மனம் அழியாதே; என்றான் - தன் சொற்கேட்டுக்கைகேயி மறுக்க மாட்டாள் என்னும் துணிபுபற்றி வசிட்டன் ‘ஆண்நாயகனே இனி நாடு ஆள்வான்’ என்றான். ‘ஏ’ காரம் தேற்றம். கைகேயி தந்துவிடுவாள்,ஒருவேளை இராமன் ஏற்காது போனால் என்று ஓர் ஐயத்தைஎழுப்பி, அப்படியாயின், ‘யாம் உளமோ’ என்று அதற்கு ஒரு பதிலும் உரைத்தான் முனிவன். 39 |