தயரதன் வசிட்டனிடம் வேண்டுதல்  

1645.என்ற அம் முனிவன் தன்னை,
     ‘நினையா வினையேன், இனி, யான்
பொன்றும் அளவில் அவனைப்
     புனை மா மகுடம் புனைவித்து,
ஒன்றும் வனம் என்று உன்னா
     வண்ணம் செய்து, என்உரையும்,
குன்றும் பழி பூணாமல்,
     காவாய்; கோவே!’ என்றான்.

     என்ற அம்முனிவன் தன்னை - என்று ஆறுதல் கூறிய அவ்வசிட்ட
முனிவனை நோக்கி(தயரதன்);  ‘கோவே! - ஆசார்யத் தலைவனே!;
நினையா வினையேன் யான் இனிப்பொன்றும் அளவில் - நினைக்க
இயலாத கொடிய வினையுடைய யாம் மேல் இறந்துபடுவதற்குமுன்னால்;
அவனைப் புனைமா மகுடம் புனைவித்து  - அந்த இராமனை
அணிதற்குரிய  முடியைச் சூடும்படி செய்து;  ஒன்றும் வனம் என்று -
காட்டுக்குப் போவோம் என்று;  (அவன் தன்மனத்தில்) உன்னா
வண்ணம் செய்து -
நினையாதபடி செய்து;  என் உரையும் - என்
வாக்கும்; குன்றும் பழி பூணாமல் - இழிவாகிய பழி மேற் கொள்ளாதபடி;
காவாய் -காப்பாற்றுவாயாக!  என்றான் -

     கைகேயியால் இம்மாற்றம் நிகழ வேண்டும் என்பதை ‘என் உரையும்
குன்றும் பழி பூணாமல்காவாய்’ என்ற தயரதன் வேண்டுகோளால்
அறியலாம்.  தன் சத்தியத்தில் சிறிதும் தவறாததயரதன் பெருங்
குணநலமும் இங்கே வெளிப்படுகிறது.                             40