வசிட்டன் அறிவுரையைக் கைகேயி மறுத்தல் 1646. | முனியும், முனியும் செய்கைக் கொடியாள் முகமே முன்னி, ‘இனி, உன் புதல்வற்கு அரசும், எனையோர் உயிர்க்கு உயிரும் மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி, வசை தீர் புனிதம் மருவும் புகழே புனையாய்; பொன்னே!’ என்றான். |
முனியும் - வசிட்ட முனிவனும்; முனியும் செய்கைக் கொடியாள் - வெறுக்கும்செயலைச் செய்த கொடியவளாகிய கைகேயியின்; முகமே முன்னி - முகத்தை நோக்கி; ‘பொன்னே! - பொன்னெனச் சிறந்தவளே; இனி - இப்பொழுது; உன் புதல்வற்குஅரசும் - உன் மகனாகிய இராமனுக்கு அரசாட்சியையும்; எனையோர் உயிர்க்கு உயிரும் - மற்றவர்களது உயிர்க்கு உயிர்ப்பையும்; மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் - வைவஸ்வத மனுவின் வமிசத்திற் பிறந்த உன்னுடைய நாயகனான தசரதனுக்கு உயிரையும்; உதவி -கொடுத்து; வசை தீர் -பழிநீங்கிய; புனிதம் மருவும் - தூய்மை பொருந்திய; புகழே புனையாய்! - புகழை அணிகலனாக அணிந்து கொள்வாய்; என்றான் - இராமனுக்கு அரசு கொடுத்தாலன்றி ஏனைய எதுவும் நிலை பெறாது ஆகையால் அதனை முதலிற்கூறினான். இராமனைக் கான் ஏகாது தடுத்தல் நோக்கம் ஆயினும் இராமன் கான் ஏகாமல்அரண்மனையில் இருந்தால் அவனே அரசேற்க உரியவன் ஆதலின் ‘அரச உதவி’ என்றான். இராமனை ‘உன்புதல்வன்’ என்ற கைகேயி கூற்றும், “தாய் கையில் வளர்ந்திலன் வளர்த்தது தவத்தால்கேகயன் மடந்தை” என்ற நகர மக்கள் கூற்றும் (1453, 1591) உறுதிப் படுத்தல்அறிக. 41 |