1650.‘வாயால், மன்னன், மகனை,
     "வனம் ஏகு" என்னா முன்னம்,
நீயோ சொன்னாய்; அவனோ,
     நிமிர் கானிடை வெந் நெறியில்
போயோ புகலோ தவிரான்;
     புகழோடு உயிரைச் சுடு வெந்
தீயோய்! நின்போல் தீயார்
     உளரோ? செயல் என்?' என்றான்.

     ‘புகழோடு உயிரைச் சுடு வெந்தீயோய்! -  புகழையும் உயிரையும்
எரிக்கும் கொடுநெருப்பானவளே;  மன்னன் - தயரதன்; வாயால் - தன்
வாயால்; மகனை -இராமனை; ‘வனம் ஏகு' - காட்டிற்குச் செல்; என்னா
முன்னம் -
என்றுசொல்வதற்கு முன்னாலேயே;  நீயோ சொன்னாய் -
நீதான் சொன்னாய்; அவனோ -அந்த இராமனோ;  நிமிர் கானிடை - 
உயர்ந்த காட்டில்;  வெந் நெறியில் -கொடிய வழியில்;  போயோ
புகலோ தவிரான் -
போவதையோ புகுவதையோ ஒழியான்; நின்போல்
தீயார் உளரோ? -
உன்னைப் போல் கொடியவர்கள் இருக்கிறார்களா?; 
செயல் என்?' - இதைக் காட்டிலும் கொடிய செயல் வேறு  என்ன
இருக்கிறது;'  என்றான் -.

     அரசன் கூறுவதற்கு முன் நீ கூறிவிட்டாய். ஆகையால், இதில் அரசன்
சத்தியம் தவறுதல்எங்ஙனம்? என்று வினாவை எழுப்பி, ‘அரசன் மெய்யில்
திரிவான் என்னின்'  என்று கைகேயிமுன்னர்க் கூறியதை (1647) மறுத்தான்
வசிட்டன் என்க.  அரசன் இறப்பது  உறுதி, இனி வேறுசெயல் என்ன
இருக்கிறது என்றும் ‘செயல் என்' என்பதற்குப் பொருள்உரைக்கலாம்.   45